தமிழ் திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ஏகப்பட்ட ஹைப்புகளுடன் வியாபாரம் செய்யப்பட்டப் படம். சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ருதி, ஹாரிஸ் ஜெயராஜ், உதயநிதி ஸ்டாலின், ரவி கே. சந்திரன் என்று பெரிய படையே இதன் பின்னணியில். ரிலிஸுக்கு முன்னமே சுமார் 80 கோடி வியாபாரம் முடிந்திருக்கிற படம். இப்படத்தை பொறுத்தவரை தயாரிப்பாளருக்கு ரிலிஸின் முன்னமே பெரும் லாபத்தை கொடுத்தப் படம். அநியாயமாய் 200ரும் முன்னூறும் கொடுத்த பார்த்த ரசிகர்களுக்கு ஜீரணிக்குமா? என்பதை பார்ப்போம்.
ஆயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன் போதிதர்மன் எனும் பல்லவ இளவரசர் வாழ்ந்து வந்தார். அவர் சண்டைப் பயிற்சி, மருத்துவம், என்று பல கலைகளில் சிறந்து விளங்கினார். ஆய கலைகள் அனைத்திலும் சிறந்த விளங்கிய அவர் தன் தாய் தந்தையின் ஆசைப்படி சீனாவுக்கு தரை மார்கமாகவே மூன்று வருட பயணம் மேற்கொண்டார். சீனாவில் ஒரு சிறிய கிராமத்தை அடைந்தார். இவரை கெட்டவராக பார்த்த மக்களுக்கு ஒரு முறை பெயர் தெரியாத வியாதி ஒன்று வர, அதை தன்னுடய மருத்துவ முறையால் தீர்த்து வைத்தார். அதன் பிறகு அந்த வைத்திய முறையை அங்குள்ள மருத்துவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அங்குள்ள மக்களுக்கு தீயவரகளால் பங்கம் வரும் போது தன் களறி பயிற்று மூலம் குங்பூ எனும் கலையை காட்டி, நோக்கு வர்மம் எனும் கலையை பயன்படுத்தி மக்களை காப்பாற்றுகிறார். இவ்வளவு செய்த மக்கள் அவர் தங்கள் ஊரில் இற்ந்து புதைத்தால் தங்கள் நாட்டிற்கு ஏதுவும் வராது என்று தவறாக நினைத்து சாப்பாட்டில் விஷம் வைக்கிறார். அதை தெரிந்து கொண்ட போதிதர்மர் அவர்களுக்காக உண்டு சாகிறார். அங்கேயே புதைக்கப் படுகிறார். கடவுளாய் வழிபடப்படுகிறார். இதுதான் போதிதர்மனின் வாழ்க்கை வரலாறு. என்னடா ஏதோ வரலாற்று பாடத்தை மக்கப் செய்வது போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? படம் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.
நிகழ்காலத்தில் சூர்யா ஒரு சர்க்கஸ் கலைஞன். ஸ்ருதி ஒரு டி.என்.ஏ பற்றிய ரிசர்ச் மாண்வி. சூர்யாவுக்கும் அவருக்கும் காதல். அப்படியென்று சூர்யா நினைத்துக் கொள்ள, இல்லை என்று தெரிந்து சோக கீதமெல்லாம் பாடி, பின்பு தெரிந்து கொள்கிறார் தான் போதிதர்மரின் வாரிசு என்றும். அவரது டி.என்.ஏவும் தன் டி.என்.ஏவும் எண்பது சதவிகிதம் சூட் ஆகிறது என்றும். அவரின் டி.என்.ஏவில் உள்ள திறமைகளை தூண்டிவிட்டால் இவரும் ஒரு போதி தர்மர் ஆகிவிடலாம் என்று சுருதி மூலமாய் தெரிந்து கொள்கிறார். சீனாவிலிருந்து டோன்லி எனும் ஒரு சைனாக்காரன் இந்தியாவில் நாய் மூலமாய் போதிதர்மர் மருந்தளித்து குணப்படுத்திய வியாதியை பரப்பி, அதற்கான மருந்தை சீனா விற்று, இந்தியாவை தன் இஷ்டப்படி ஆட்டலாம் என்று அவர் ஒருவரை மட்டும் அனுப்புகிறது. அவனுக்கு இட்ட இன்னொரு கட்டளை போதிதர்மனின் டி.என்.ஏவை பற்றி ஆராய்ச்சி செய்யும் சுருதியை கொல்வதும் ஒரு காண்ட்ராக்ட். அவன் இந்தியாவில் அந்த நோயை பரப்பினானா? ஸ்ருதியை கொன்றானா? போதிதர்மனின் டி.என்.ஏவை செலுத்தி அதன் மூலம் முழு போதிதர்மன் ஆனாரா சூர்யா? என்பது போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் பதிலளித்துள்ளார்கள்.
பெரிதாய் பில்டப் செய்யப்பட்ட போதிதர்மர் கேரக்டரில் சூர்யா நன்றாக இருக்கிறார் பார்க்க. நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை. போதி தர்மர் எபிசோட் டெப்த் இல்லாமல் வெறும் ஆர்ப்பாட்டமாகவே இருக்கிறது. சிக்ஸ் பேக்கில் கட்டுமஸ்தாய் குங்பூ கலைஞர என்பதை நம்ப வைக்கிறார். அவ்வளவுதான். அவரை பற்றி பெரிய டீடெயில் இல்லை. நிகழ்காலத்தில் சர்கஸ் கலைஞராய் வரும் சூர்யா ஆடுகிறார், பாடுகிறார். அருமையாய் சண்டை போடுகிறார். ஆங்காங்கே ஸ்ருதியை காதலிக்கிறேன் என்று காமெடி செய்கிறார். பெரும்பாலும் தன் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸை சரியானபடி உபயோகித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பாடல் காட்சிகளில் ஸ்ருதிக்கும், சூர்யாவுக்கும் எந்த வித �கெமிஸ்ட்ரி�யும் வரவில்லை. பாவம் மனுஷன் கமல் பொண்ணு என்ற எண்ணத்திலேயே நடித்திருக்கிறார் போலும்.
ஸ்ருதி அழகாக இருக்கிறார். ஸ்பஷ்டமாய் அழுத்தம் திருத்தமாய் டாமினண்ட் வாய்ஸில் பேசுகிறார். பாடல் காட்சிகளில் ராவிஷிங் பியூட்டியாக இருக்கிறார். சில பல காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார். அதே போல படு பயங்கர வில்லனாய் வரும் ஜான். மனுஷன் பேசாமலேயே நிறைய விஷயங்களை செய்கிறார். ஆனாலும் படம் நெடுக டெர்மினேட்டர் டூவை ஞாபகப்படுத்துகிறார். தக்குணூண்டு கண்ணை வைத்துக் கொண்டு ஊரிலுள்ள் எல்லாரையும் சடுதியில் நோக்கு வர்மம் செய்து தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறார். க்ளைமாக்ஸ் பைட்டில் புழுதி பறக்க சண்டை போடுகிறார்கள் கிராபிக்ஸில்.
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் பெரிய லெட்டவுன். பின்னணியிசை அதை விட கொடுமை. க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் செய்திருக்கும் பின்னணியிசை படு இம்சை. ஓகே என்ற �யம்மா..யம்மா� பாடலும் அபத்த தருணத்தில் வருவதால் உட்கார முடியவில்லை. ஆண்டணியின் எடிட்டிங் ஓகே. ரவி.கே.சந்திரன் வெகு நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரின் இந்தி படங்களைப் பாருங்கள். அப்படி கண்ணில் ஒற்றிக் கொள்ளூமாறு இருக்கும் ஒவ்வொரு ஷாட்களும். இதில் எல்லாமே மிஸ்ஸிங் அவசர அடியாய் அடித்த எபெக்ட் மட்டுமே தெரிகிறது. அதிலும் வில்லன் நோக்கு வர்மத்தில் மாறி மாறி ஆட்களை வசீகரித்து சூர்யா, ஸ்ருதியை கொல்ல செய்யு முயற்சி சீனில் க்ராபிக்ஸ் படு சொதப்பல். பாடல் காட்சிகளில் ஓரளவுக்கு பரவாயில்லை.
எழுதி இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். வழக்கமாய் முருகதாஸ் படங்களில் ஒரு டஃப் மேட்டரை சொல்வதற்கு பக்கா மசாலாவான ஒரு பில்டப் செய்து திரைக்கதையமைப்பார். உதாரணம் கஜினி. மொமண்டோவிலிருந்து அந்த கேரக்டரின் ப்ரச்சனையை எடுத்தாலும் அதை திரைக்கதை அமைத்தவிதத்தில் மிரட்டியிருப்பார். க்ளைமாக்ஸை தவிர. அதே போலத்தான் ரமணா போன்ற படங்களிலும். அதைப் போல இதிலும் ஒரு வியாதியை பரப்பி அதனை குணமாக்க மருந்து கண்டுபிடிக்கும் வேலையை செய்யும் வில்லனுக்கும் அதை தடுக்க நினைக்கும் ஹீரோவுக்குமான கன்பர்ன்டேஷன் தான் என்றாலும் அதற்கு டி.என்.ஏ, போதி தர்மர், தமிழ், தமிழர், என்று உணர்வுப் பூர்வமாய் உசுப்பேத்திவிட்டு ரணகளப் படுத்து முயன்று அரைகுறையாய் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கேள்வி கேட்க வேண்டும் என்றால் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. போதி தர்மர் எதற்காக சைனா போனார்? அவரை சைனாவுக்கு அனுப்பி வைத்ததற்கான காரணம் என்ன? அவர் தரையில் புழுதியை கிளப்பி அதை காற்று பந்தாக்கி எதிரியின் மேல் அனுப்புவது குங்பூவில் இருக்கிறதா? ஏதோ சித்து விளையாட்டு என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளாம். அப்புறம் சூர்யாவை மட்டுமே நம்பி ஒரு சர்க்கஸ் கம்பெனி நடக்கிறது. அவரே மக்கள் கூட்டத்தை கூட்ட, நடு ரோடில் ரிங்கா ரிங்கா என்று பாடுகிறார். சர்க்கஸில் பார் விளையாடுகிறார். யானைக்கு உடம்பு சரியில்லை என்றால் அழைத்துப் போகிறார். அப்புறம் பாதி படத்திற்கு மேல் ஸ்ருதியுடன் சுற்றுகிறார். போதி தர்மரின் டி.என்.ஏ சேம்பிள்கள் சைனாவில் தான் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டி.என்.ஏ சேம்பிள்கள் எப்படி ஸ்ருதிக்கு கிடைத்தது? இடைவேளைக்கு பிறகு அடுத்து என்ன காட்சி வரும் என்பதையும். க்ளைமாக்ஸில் சூர்யா, ஜான் சண்டைக் காட்சியின் முடிவில் என்ன ஆகும் என்பது பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். அவ்வளவு டெம்ப்ளேட். உதாரணமாய் லிப்டிற்கு சூர்யாவும், ஸ்ருதியும் காத்திருப்பது, லிப்ட் வர நேரமாகும் போது கிளம்ப அந்த லிப்ட்டில் வில்லன் வருவது. போன்ற பல காட்சிகள். ஒரு செகண்ட் பார்த்தாலே ஹிப்னடைஸ் செய்ய முடியுமா? இப்படி தொடர்ந்து பல கேள்விகள் ஓட்டை மேல் ஓட்டையாய் வந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியவில்லை.முதல் பாதியில் போதியும், பாடல்கள், ரம்பராய் இழுக்க, இரண்டாவது பாதிதான் படு சூடான சேஸிங். ஆரம்பிச்ச போது பர்ப்ரவென போகும் படம். பின்னர் நான் யோசிக்கும் அத்தனை காட்சிகளும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க, பெரிய த்ரில் ஏதுமில்லாமல் பொசுக்கென முடிந்து போகிறது.
நல்ல விஷயங்கள் என்றால் இம்மாதிரியான சாதாரண கதைகளுக்கு வேறு ஒர் கலர் கொடுக்க முயன்ற முயற்சி. போதி தர்மர் பற்றிய பில்டப்புகள். நம் நாட்டில் இல்லாத விஷயங்களா? அதுவும் தமிழன் வரலாற்றில் அவன் செய்யாதது எதுவுமே இல்லை என்று இடைவேளைக்கு பிறகு தமிழ் உணர்வை தூண்டிவிட்டு செய்யப்பட்ட திரைக்கதை. (இப்படம் தெலுங்கில் டப்பாகி பேசும் போது �மன தெலுகு தேசமுலு� என்று வரும்) நம் வரலாற்றை பற்றி நாம் தெரிந்து கொள்ளாதது. மஞ்சளே விவசாயம் செய்யாதவன் அதற்கு பேட்டண்ட் வாங்கிய கொடுமை. உலக நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை அழிக்க நினைப்பது, டி.என்.ஏ சமாச்சாரங்கள் போன்ற பல நல்ல விஷயங்களை உறுத்தாமல் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் வைத்தது. அந்த அடையாறு யானை சவாரிக் காட்சி, வில்லன் நோக்கு வர்மத்தில் ஒவ்வொரு ஆளாய் ஏவி ஸ்ருதியையும், சூர்யாவையும் கொல்ல முயலும் காட்சி, சென்னைக்குள் இருக்கும் காடு என்கிற மேட்டர். சென்னை வாசிகளுக்கு கூட அவ்வளவாய் தெரியாது. இரண்டாவது பாதியில் கொடுத்த பரபரப்பான மசாலா திரைக்கதையினால் படம் தப்பிக்கிறது. மொத்தத்தில் தமிழ் நாட்டில் தமிழனை தூண்டிவிட்டால் ஜெயிக்கலாம் என்ற உண்மையை இப்படத்தின் மூலம் நிருபித்திருக்கிறார்கள்.
-நன்றி-.
-அன்புடன்-
-ரூபன்-