விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா மோத்வானி நடித்து தீபாவளிக்கு ரிலீசான வேலாயுதம். ஜெயம் எம் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். சூர்யாவின் ஏழாம் அறிவோடு தியேட்டர்களுக்கு போட்டி போட்டு உலகெங்கும் ரிலீசாகிவிட்டது வேலாயுதம் !
தன் தங்கையே உலகம் என்று எண்ணி படு அப்பாவியாக வாழும் ஒரு கிராமத்தவன் நகரத்துக்கு வரும் வேளையில் தற்செயலாக, பத்திரிகையாளர் ஒருவரால் படைக்கப்பட்ட ஒரு கற்பனையான சாகசவீரன் பாத்திரமாக மாறிவிட, அடுத்து இடம்பெறும் மோதல்கள், அந்த அப்பாவி சாகச மனிதன் சந்திக்கும் சவால்கள் என்று நீளும் ஒரு விறுவிறு கதை தான் வேலாயுதம்.
ஒரு நகரத்திற்கு குண்டு வைக்க திட்டம் தீட்டுவது போல் “வேலாயுதம்” படத்தின் கதை துவங்குகிறது. அவர்களின் திட்டம் நிறைவேற ஒரு தமிழ்நாட்டு அமைச்சரையும் கடத்துகின்றார்கள். அவரும் தீவிரவாதிகளின் துணையாக செயல்படுகிறார். இந்த விஷமிகளுடன் சேர்ந்து, தனது அடி ஆட்களின் துணையுடன் பல இடங்களில் குண்டு வைக்கிறார் அந்த அமைச்சர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையும், அமைச்சரின் அடியாட்களின் செயற்பாடுகளையும் பத்திரிகையாளரான ஜெனிலியாவும், அவரின் சில நண்பர்களும் படம் பிடிக்க முயல்கின்றனர். இதனைக் கண்ட அமைச்சரும் மற்றும் அவரது அடியாட்கள், ஜெனிலியாவின் நண்பர்களை எரித்துக் கொண்டுவிடுகின்றனர். ஜெனிலியாவை தாக்கி விட்டு மீண்டும் பாம் வைப்போம் என்று சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறும் போது, சிகரட் பற்றவைகின்றனர். அந்த தீ தவறி வாகனத்தில் இருந்த பெட்ரோல் மீது விழ, வாகனம் தீப்பற்றி எரிந்து அந்த அடியாட்கள் இறந்துவிடுகின்றனர்.
ஜெனிலியாவும் குறும்புத்தனமாக ஓரு பேப்பரில், இவர்களை நான் தான் கொன்றேன். மீண்டும் குண்டுவைத்தால், மீண்டும் மற்றவர்களையும் அழிப்பேன் என்று எழுதி, அதில் வேலாயுதம் என்று எழுதிவிட்டு போகின்றார்.
“வேலாயுதம்” என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய் கிராமத்தில், பாசக்கார அண்ணனாக, தங்கையுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். தங்கையின் திருமணத்திற்காக, தான்
சீட்டு கம்பனியில் சேமித்துவைத்த பணத்தை எடுக்க சென்னைக்கு வருகின்றார். சென்னைக்கு வந்த இடத்தில், விஜய் செய்யும் சில செயல்பாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிராக மாறிவிடுகிறது.அதே போல் தற்செயலாக ஒரு இடத்தில் அவர்களிடமிருந்து ஜெனிலியாவை காப்பாற்றுகிறார் விஜய்.
அப்போது விஜயிடம் நீதான் மக்களை காக்கும் வேலாயுதம் என்கின்றார் ஜெனிலியா. விஜய் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். விஜய் செய்த செயல்கள், எதேர்ச்சையாக தீவிரவாதிகளுக்கு எதிராக அமைந்ததை பற்றி விளக்கி கூறுகிறார். இதை எல்லாம் கூறி, விஜயை வேலாயுதமாக மாறி, தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றார்.ஆனால் அதை மறுத்துவிடுகிறார் விஜய்.
விஜயுடன் சீட்டு கம்பனியில் பணம் சேமித்து வைத்தவர்களில் ஒருவராக வருகிறார் இளவரசு. ஆனால், அந்த சீட்டுக் கம்பனி பலரை ஏமாற்றி விடுகிறது. அந்த அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத இளவரசு, தற்கொலை செய்து கொள்கிறார். அவரது மரணத்திற்கு பிறகு, அவரது மனம் வெகுவாக மாறுகிறது. அதன் பின்னர், விஜய் வேலாயுதமாக மாறுகின்றார்.
இதற்கிடையில், ஜெனிலியாவிற்கு விஜய் மீது காதல் வருகிறது. ஆனால், விஜய் தனது முறைப்பெண்ணான ஹன்சிகா மோத்வாணியை காதலிப்பதாக சொல்ல அவர்களுக்காக தனது ஒரு தலைக் காதலை விட்டு தருகின்றனர் ஜெனிலியா.
கிராமாவாசியாக, ஒரு பால்காரராக வரும் விஜய் ஒரு சூப்பர் ஹீரோ வேலாயுதமாக மாறி வில்லனையும், அவரது ஆட்களையும் எப்படி ஒழித்துக் கட்டுகிறாரா, இல்லையா என்பது தான் மீதமுள்ள கதை.(இயக்குனர் ராஜா பேட்டிகளில் சொன்னதுபோல் ஒரு காட்சியில் கூட விஜயை பால்க்காரனாக காண்பிக்கவில்லை)
விஜய்க்கு பழக்கப்பட்ட ரோல். ஆனாலும் ஏதோ ஒரு வெரைட்டி கொடுக்க ட்ரை பண்ணியிருக்கிறார். பாடல் காட்சிகளில் துறு துறு விஜய்.சொன்னா புரியாது பாடலில் தியேட்டரே அதிர்கிறது. அது விஜய்க்கு இன்னும் உள்ள மாஸிற்கு சாட்சி. �ரத்தத்தின் ரத்தமே� பாடல் விஜய் ரசிகர்களுக்கென்றே உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் உறுத்தாமல் கதையோடு நகர்கிறது.வழக்கம் போல், விஜய் தனது காமெடி, நடனம், செண்டிமெண்ட், ஆக்ஷன் போன்ற அனைத்து அம்சங்களிலும் அசத்தியுள்ளார்.
ஜெனிலியா ஹிந்தியிலும் தமிழிலும் மார்க்கெட் உள்ள பெண் ஏன் தமிழில் மட்டும் ஷோபிக்க முடியவில்லை தெரியவில்லை. இதிலும் தியாகி ரோல் தான். கூடவே நடிக்க முயற்சிக்கும் காட்சிகளில் முகபாவம் வேறு லூசுப்பெண் இமேஜை விட்டு வெளிவர மறுக்கிறது. ஹன்சிகாவுக்கு வேலாயுதம் ஒரு பெரிய மாஸ் பிரேக் தான் ! விஜயுடன் டூயட்டுகளில் தூள் கிளப்புகிறார். ஏதோ நடிக்க வேறு ஆரம்பிச்சுருக்காரு அத்தோட கவர்ச்சிக்கும் குறைவில்லை. சந்தானம் காமெடி காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறார். பொறம்போக்கு பொழுதுபோக்குன்னு அவர் வார்த்தைகளை வச்சே டமிங் வெடி வெடிக்கிறார். விஜயின் தங்கையாக வரும் சரண்யா, ஹன்சிகாவின் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், போலிஸ் அதிகாரியாக வரும் ஷாயாஜி ஷிண்டே அனைவரும் அவரவர் பணிகளை நன்றாக செய்துள்ளனர். இளவரசு,பாண்டிய ராஜன், ராகவ்,சிங்கமுத்து,வையாபுரி,சூரி, ப்ளைக் பாண்டி ஆகியோர் சிறிய நேரத்துக்கே தலையை காட்டினாலும் அவரவர் பணியை பாராட்டக்குரிய வகையில் செய்துள்ளனர்.
விஜய் ஆண்டனியின் இசை இப்படத்திற்கு சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது. எல்லா பாடல்களும் டாப் கிளாஸ். “மொளச்சு மூணு எலையும் விடல” வில் கிராமியை இசையில் கலக்கி சில்லாக்ஸ், மாயம் செய்தோவில் வெஸ்டர்னில் கலக்கி “சொன்னா புரியாது” வில் டப்பாங்குத்துவில் இறங்கி , சூப்பர் வெரைட்டி கொடுத்திருக்கிறார் ! சபாஷ்! ப்ரியனின் ஒளிப்பதிவு சேசிங்க் காட்சிகளில் பின்னியெடுக்கிறது கேமரா. ஆனால் கிராமத்து காட்சிகளில் இன்னும் ரம்மியம் கூட்டியிருக்கலாம். மற்றும் V.T.விஜயனின் எடிட்டிங் இப் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அனைத்தையும் தாண்டி, இப்படத்தின் வசனங்கள் மிகுந்த பாராட்டுக்களை குவித்து வருகிறது.
“உழைச்சு சாப்பிடுறவனோட வியர்வை,தாய்ப்பாலைவிட சிறந்தது”.
தம்பியை மட்டுமே இயக்கிப் பழகிய ராஜாவுக்கு வேலாயுதம் ஒரு புது மாஸ் களம். சவாலாய் எடுத்து செய்திருக்கிறார். சண்டை காட்சிகளை சரியான இடத்தில் புகுத்தி சென்டிமென்டை சரிவர கலந்து விஜயின் மாஸ் அப்பீலை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் ராஜா. ஆனால் சில இடங்களில் விஜயின் பழைய பட காட்சிகளைப் போலவே வரும் ரிப்பிடீஷனை தவிர்த்திருக்கலாம். இருந்தாலும், விஜயை வைத்து ஒரு மாஸ் என்டர்டெய்னரை தந்திருக்கிறார்.
“வேலாயுதம்”, “ஆசாத்” என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என கருதப்படுகிறது. ரீமேக்காக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்களை செய்துள்ளார் M.ராஜா.
விஜய் பற்றி எவ்வளவு நக்கல் ஜோக்ஸ் வந்தாலும் மக்களுக்கு அவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. கில்லி மாதிரி இன்னொரு படம் வராதா என்று மக்கள் ஜாலியாக ஒரு படம் பார்க்க இன்றும் ஏங்குகிறார்கள். அந்த நம்பிக்கையை விஜய் 75% பூர்த்தி செய்திருக்கிறார்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...