ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம்
சொத்து வாங்குறதுல மக்கள் எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும் என்பதை சொல்லும் கதை. |
![]() பொது மக்களின் நிலமோ அல்லது புறம்போக்கு நிலமோ எதுவாக இருந்தாலும், தனக்கு பிடித்துவிட்டால் அதை வளைத்துப் போடும் பெண் அரசியல்வாதியிடம், விஸ்வநாதன் நடத்தி வரும் அனாதை ஆஸ்ரமம் சிக்கி சின்னாபின்னமாகிறது. நல்ல விலைபோகும் அந்த இடத்திற்காக ஒட்டு மொத்த ஆதரவற்ற சிறுவர்களையும் நடுத்தெருவில் நிறுத்தும் அரசியல்வாதியை எதிர்க்கும் விக்ரம், எப்படி அவரை அழித்து இடத்தை மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை. சீயான் விக்ரம் எத்தனை திறமையான நடிகரோ, அதே அளவுக்கு தனக்கான கதைகளை அவரால் தேர்வு செய்ய இயலாதவர் என்பதை ‘மஜா’, ‘ராவணன்’, இப்போது ‘ராஜாபாட்டை’ என அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். முகத்தில் முதுமைக்கான சுருக்கங்களை வாங்கிக் கொண்டிருக்கும் விக்ரம், தன்னை ஒரு சினிமா ஸ்டண்ட் மேன் கதாபாத்திரத்தில் பொருத்திக் கொண்டு, வில்லன்களை வேட்டையாடும் கதையில் நடித்தால் சும்மா பிச்சுகிட்டு போகும் என எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் கதைக்களம் எவ்வித சீரியஸ்நெஸூம் இல்லாமல் நில அபகரிப்பைப் பற்றி மிக பலகீனாமாக ஜல்லியடிக்கிறது. அது ஏதோ, தக்ஷிணா மூர்த்தி என்ற தனிப்பட்ட கிழவரின் கருணை இல்லம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதுபோல தேங்கி விடுவதால் விக்ரம் என்ற மாஸ் ஹீரோ நிஜமாகவே மொத்த படத்திலும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆகிவிட்டார். தன்னிடம் அடைக்கலமாக அழைத்து வரும் முதியவர்( இயக்குனர் விஸ்வநாத்) தக்ஷிணா மூர்த்தியின் கருணை இல்ல நிலத்தை அக்கா(சனா) அபகரித்துக் கொள்ள, இது போன்ற அபகரிப்புகளை வாப்பா மூலம்தான் அக்கா செய்கிறார் என்பதை அறிந்து, அவரைக் கடத்தி, தனது சினிமா செட் சிபிஜ அலுவலகத்தில் வப்பாவை வைத்து பல்வேறு கெட்-அப்புகளில் வந்து அவரை சிபிஐ அதிகாரி போல விசாரித்து வீடியோ ஆதாரத்தை உருவாக்குகிறார் ஸ்டண்ட் பாய் அனல் முருகனாக நடித்திருக்கும் விக்ரம். ஸ்டண்ட் பாய் என்பதற்காக வில்லன்களின் அடியாட்களை பதினைந்து நிமிட இடைவெளியில் கைநரம்பு புடைக்க அடித்துக் கொண்டே இருக்கிறார். அய்யோ! இப்போ சண்டை வரப்போகுது என்று நாம் பயந்தால் நிஜமாகவே அந்தரத்தில் பாய்ந்து அடிக்கிறார் விக்ரம். சண்டைக்காட்சிகளில்கூட அவருக்கு குளோஸ் அப்புகளை அதிமாக வைத்து, அவருக்கு வயதாகி விட்டது என்று காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். படத்தில் விக்ரம் போட்டிருக்கும் கெட்-அப்புகள் நன்றாக பொருந்தியிருக்கும் நிலையில் அவைகளை வைத்து இரண்டாவது பாதியை ஜமாய்த்திருந்தால் குறைந்தது விக்ரம் ரசிகர்களையாவது திருப்திப் படுத்தியிருக்கலாம். தீக்ஷா சேத், ஒரு படத்தில் ஹீரோயினின் தோழி எவ்வளவு காட்சிகளில் வருவாரோ அதை விடவும் குறைவான காட்சிகளில் வந்துபோகிறார். பாடல்களையும் மற்ற மூன்று பேர் பகிர்ந்துகொண்டதால், அதிலும் அம்மணிக்கு வஞ்சகம்தான். மொத்தத்தில் தீக்ஷா சேத், ஊருகாய் போலத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். காமெடிக்கென்று தனி டிராக் இல்லையென்றாலும், டைரக்டர் ஆசையில் திரியும் தம்பி ராமையாவோடு விக்ரம், காமெடியையும் கவனித்துக் கொள்கிறார். திருந்தும் வில்லனாக அவினாசும், திருந்தாத வில்லனாக ப்ரதீப் ராவத்தும் தங்கள் பங்கை செய்கிறார்கள். அக்கா கதாபாத்திரம் அழுத்தமில்லாமல் படைக்கப் பட்டிருப்பதால் அதை விக்ரம் சாகடித்தால் படம் இன்னும் சொம்பையாகிவிடும் என்று நினைத்த இயக்குநர், அதை மிகப்பழைய டெக்னிக் மூலம் கொன்றுவிட்டு, இதுதாண்டா க்ளைமாக்ஸ் எனும்போது ரசிகர்கள் காசுபோச்சே என்று தியேட்டரில் கதறுகிறார்கள். இவ்வளவு மொக்கையான க்ளைமாக்ஸூக்கு பிறகு தனது தோழிகள் ரீமா சென், ஸ்ரேயா இருவரோடும் விக்ரம் ஆடும் குத்தாட்டம் எதற்கென்று தெரியவில்லை. அந்த பாடலின் பல்லவி முடியும்வரைகூட பார்க்க பொறுமையில்லாமல் வெளியேறுகிறார்கள் ரசிகர்கள். யுவன் சங்கர்ராஜா ஆக்ஷன் படத்துக்கு என்ன தேவையோ அதை பின்னணி இசையாகவும், பாடலாகவும் கொடுத்திருக்கிறார். மதியின் ஒளிப்பதிவும் அப்படியே. சினிமா வில்லன்களுக்கு பின்னால் நிற்கும் ஜிம் பாய்களுக்கும், சண்டைக் கலைஞர்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்கிற ஒரு வரி மெசேஜ் சொல்ல, மசாலாவை அதிகமாகத் தூவியிருக்கிறார் இயக்குநர் -நன்றி- -அன்புடன்- -ரூபன்- |
இந்த திரைவிமர்சனத்துக்கு உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்குக
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-